பைக் மற்றும் டாக்சி - உணவு டெலிவரிக்கு தடையா?

இருசக்கர வாகனங்களை வணிக ரீதியான பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

பைக் மற்றும் டாக்சி - உணவு டெலிவரிக்கு தடையா?

ஊபர், ராப்பிடோ, போன்ற நிறுவனங்கள் இரு சக்கர வாகனங்கள் மூலம் வணிகரீதியான போக்குவரத்து சேவையை வழங்கி வருகின்றன.  இதேபோல் சொமேட்டோ, சுவிக்கி போன்ற நிறுவனங்கள், இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி அதிவேக உணவு டெலிவரி என்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.   

இந்நிலையில், இருசக்கர வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்த அனுமதி உள்ளதா என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக போக்குவரத்து துறை  பதிலளித்துள்ளது.  அதில், பைக் டாக்சி போன்ற சேவைகள் தமிழக அரசால் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், டெலிவரி செய்வதற்காகவும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவது தொடர்பாக எந்தவித அனுமதியும் கிடையாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பைக் டாக்சி மற்றும் உணவு டெலிவரி போன்ற சேவைகளுக்கு தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.