உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்...

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உப்பூர் அனல்மின் நிலைய திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி பெறுவதில் முறையான விதிகளை கடைபிடிக்கவில்லை எனக்கூறி, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காளிமுத்து என்பவர் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக உறுதிசெய்யப்பட்ட ஆயிரத்து 342 ஏக்கர் நிலத்தில், பெரும்பாலான நிலங்கள் விவசாய நிலங்கள் என்றும், இதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, முறையாக நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்க வழங்கிய ஒப்புதல் முறையாக வழங்கப்படவில்லை என கூறி அதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, பசுமை தீர்ப்பாயத்தின் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதால் மாதத்திற்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், அங்கு இருக்கக் கூடிய கருவிகள் மற்றும் பொருட்கள் பழுதடைந்து விடும் என்றும் வாதிட்டனர்.

இதனை கேட்டறிந்த நீதிபதி, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த இடைக்கால தடையை நீக்குவதாகவும், மனுதாரர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் 6 வாரத்திற்குள் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.