தஞ்சையில் கோலாகலமாகத் தொடங்கியது சதயவிழா கொண்டாட்டம்...!

தஞ்சையில் கோலாகலமாகத் தொடங்கியது சதயவிழா கொண்டாட்டம்...!

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 ஆம் ஆண்டு சதய விழா  கோலாகலமாக தொடங்கியது.

தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியக் கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின், பிறந்த நாளான ஐப்பசி மாதம் சதய நட்சத்திர நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 24 ஆம் நாள் அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டிற்கான சதயவிழா இன்று காலை மங்கல இசையுடன் கோலாகலமாக தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, விழாவின் ஒரு பகுதியாக களிமேடு  அப்பர் பேரவையின் சார்பில் ஓதுவார்கள் திருமுறை இசைத்தனர்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவைக் காண தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் இருநூறுக்கும்  மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சதய விழாவை முன்னிட்டு பெரியகோவில் விமானம், மராட்டா நுழைவுவாயில், கேரளாந்தகன் நுழைவு வாயில். ராஜராஜன் நுழைவு வாயில், கோயில் உள்பிரகாரம், வெளிபிரகாரம், கோட்டை மதில்சுவர் ஆகியவை மின்னொளியில் மிளிர்கின்றன.

ராஜராஜ சோழன் சிலை, அரசு மருத்துவமனை சாலை. பெரியக் கோவில் சாலை ஆகிய இடங்கள் மின் விளக்குகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

சதய விழாவின் முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை  அணிவிக்கும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது. விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க   |  அண்ணாமலை -திருமாவளவன் சந்திப்பு; பேசிக்கொண்டது என்ன?