” சமரசங்கள் தோல்வி அடைந்ததால் தான் ராமாயண, மகாபாரத போர்கள் உருவானது” - உச்சநீதிமன்ற நீதிபதி

” சமரசங்கள் தோல்வி அடைந்ததால் தான் ராமாயண, மகாபாரத போர்கள் உருவானது” -  உச்சநீதிமன்ற நீதிபதி

சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததால் தான் ராமாயண போர்கள் நிகழ்ந்தன என உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். 

தமிழ்நாடு சமரச தீர்வு மைய புது கட்டிட திறப்பு விழாவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 120 தாலுகாக்களில் துணை சமரச தீர்வு மையங்கள் துவக்க விழாவும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

புதிய சமரசத் தீர்வு மையத்தையும், 120 தாலுகா துணை சமரச தீர்வு மையங்களையும் துவக்கி வைத்து பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், பிரச்சனைகளுக்கு தீர்வு காண சட்ட முறைகள் இருந்தாலும், அவற்றை விதிகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு மேற்கொள்ள வேண்டி உள்ளது என்றும், நீதிமன்றங்களில், வழக்கை தொடர்ந்தவருக்கு தான் என்ன விரும்புகிறோம் என தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால் தீர்வு மையங்களில் அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. சமரச தீர்வு சிறந்த நடைமுறை என்றும் குறிப்பிட்டார்.

” சமரசத் தீர்வு மையங்கள் குடும்ப பிரச்சினைகளுக்கு மட்டுமானது அல்ல;  வர்த்தக ரீதியிலான பிரச்சினைகளிலும் சமரச தீர்வு மையங்களை அணுகலாம்”, என்றார். அதோடு,  சென்னை உயர்நீதிமன்றம் சமரச தீர்வு மையத்தை உருவாக்கியதில் முன்னணியில் உள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் மேடையில் பேசும்போது:- 

புதிதாக கட்டப்பட்டுள்ள சமரச தீர்வு மையம் நீதிமன்றத்தை போல் அல்லாமல், குறையை தெரிவிக்கும் இடமாகவே விளங்குகிறது. ராமாயணம் மகாபாரதம் காலங்களில் இருந்தே சமரச தீர்வு என்பது நடைமுறையில் உள்ளது. சமரசங்கள் தோல்வி அடைந்ததால் தான் ராமாயண, மகாபாரத போர்கள் உருவானதாக அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்றம் என்பது ரோல்ஸ் ராய்ஸ் காரைப் போன்றது என்றும், சமரசம் என்பது எரிபொருள் சிக்கனம் கொண்ட மாருதி காரை போன்றது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா மேடையில் பேசுகையில்:- 

2005 ஆம் ஆண்டு விதைக்கப்பட்ட சமரச தீர்வு மையத்தின் விதை இன்று பெரிய ஆலமரமாக வளர்ந்துள்ளது என்று சுட்டிக் காட்டினார்

புதிதாக கட்டப்பட்டுள்ள சமரச தீர்வு மையம் மூலமாக சமரச தீர்வு நடைமுறையை தரம் உயர்த்தி ஏழை மக்களின் குறைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் வரவேற்புரை ஆற்றினார். நீதிபதி கிருஷ்ணகுமார் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க   | கொடநாடு வழக்கு: தனபால் மனைவியிடம் இபிஎஸ் தரப்பினர் பேரம்!!