”ஆளுநரே பாதியில் அல்ல, முழுமையாக வெளியேறுங்கள்” கண்டனம் தெரிவித்த சு.வெங்கடேசன்!

”ஆளுநரே பாதியில் அல்ல, முழுமையாக வெளியேறுங்கள்” கண்டனம் தெரிவித்த சு.வெங்கடேசன்!

தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் முழுமையாக வெளியேற வேண்டும் என சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

உரையை வாசித்த ஆளுநர்:

நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றிருந்த “திராவிட மாடல்”, அமைதி பூங்கா தமிழ்நாடு போன்ற வார்த்தைகளை குறிப்பிடாமல் உரையை ஆளுநர் வாசித்தார்.

தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர்:

இதையடுத்து, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்றும், உரையில் ஆளுநர் சேர்த்து படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து, ஆளுநர் தாமாக பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். 

இதையும் படிக்க: எழுவர் விடுதலை முதல் ஆன்லைன் ரம்மி வரை...ஆளுநரின் செயல்பாடு என்ன? திரும்பப் பெற மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!

பேரவையை விட்டு வெளியேறிய ஆளுநர்:

இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இதையடுத்து ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கண்டனம் தெரிவித்த வெங்கடேசன்:

இந்நிலையில், சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறியதற்கு கண்டனம் தெரிவித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி, “இனி தமிழ்நாட்டின் ஆளுநர் திருக்குறள் பற்றியோ, தமிழ் இலக்கியத்தை பற்றியோ, மாண்புகளை பற்றியோ அவமரியாதையாக திசை திருப்பி இந்துத்துவாவின் குரலில் பேசினால் ஆளுநர் மாளிகை முன்பு காரி உமிழும் போராட்டத்தை ஒவ்வொரு தமிழ் பற்றாளனும் செய்வான்.” என தாம் பேசிய வீடியோவை பதிவிட்டு, “ஆளுநரே பாதியில் அல்ல, முழுமையாக வெளியேறுங்கள்” என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.