ஆளுநர் ஒரு அரசியல்வாதி ..! சட்டத்துறை அமைச்சர்...!!

ஆளுநர் ஒரு அரசியல்வாதி ..! சட்டத்துறை அமைச்சர்...!!

"ஆளுநர் ஒரு அரசியல்வாதியை போல செயல்படுகிறார். எனவே, அரசியல்வாதிகள் கூறும் கருத்துகளுக்கெல்லாம் நான் பதில் கூற முடியாது" புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று  செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில் "ஆளுநர் அரசியல்வாதியாக மாறிவிட்டார். அரசியல்வாதி கூறும் கருத்துக்கெல்லாம் தான் பதில் கருத்து கூற முடியாது. இரண்டாவது முறையாக ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதற்கான தீர்ப்பை மக்கள் சொல்வார்கள். தமிழ்நாடு மிகப் பொறுமையாக செல்லக்கூடிய மாநிலம். கருத்து மோதல்கள் இருந்தால் கூட அவற்றை எல்லாம் அனுசரித்து செல்லக்கூடிய மாநிலம். ஆளுநர் விஷயத்தை பொருத்தவரையில் தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவான நல்ல முடிவு எடுப்பார். சட்டப்பேரவையில் தான் அந்த முடிவை எடுக்க வேண்டும் என்று இல்லை" என்றும் அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து "ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ஆளுநர் பேசியதற்கு, எல்லாக் கட்சித் தலைவர்களும் ஆளுநருக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதை போல நானும் எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார்.

முன்னதாக, ஆளுநர் கிண்டி ஆளுநர் மாளிகையில் 2 நாட்களுக்கு முன்பு குடிமைப்பணி தேர்வு எழுதும் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றும் போது ஸ்டெர்லைட் போராட்டம் , ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா போன்றவை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது குறிப்பிட தக்கது.