மணல் தொழிலதிபர் ராமச்சந்திரன் வீடுகளில் 3வது நாளாக ED சோதனை!!

புதுக்கோட்டையில் மணல் குவாரி உரிமையாளர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர் மணிவண்ணன் ஆகியோர் வீடுகளில் 3-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை நடத்தி வருகிறார். இதன் மூலம் அரசுக்கு பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, புதுக்கோட்டையில் உள்ள ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த செவ்வாய் கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 

துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப் காவல்துறை பாதுகாப்புடன் ராமச்சந்திரனின் அலுவலகம் மற்றும் அவரது நண்பர் மணிவண்ணன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக  நடைபெற்ற சோதனையின் இறுதியில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், ராமச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3-வது நாளாக இன்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, சென்னை அண்ணா நகர் G பிளாக்கில் ஆடிட்டர் சண்முகராஜ் மற்றும் அவர் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றும் ஈஸ்வரி ஆகியோரது வீடுகளில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை தொடங்கிய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாக வில்லை. 

இதையும் படிக்க || நிபா வைரஸ் பரவல்... கட்டாய முகக் கவசம் அணிய உத்தரவு!!