200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இடத்தை அகற்றும் முயற்சியில் மாநகராட்சி...!

200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இடத்தை அகற்றும் முயற்சியில் மாநகராட்சி...!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இடத்தை மாநகராட்சி அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி புது குடியிருப்பு பகுதியில் அருந்ததியர் காலனி உள்ளது. இங்கு திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் இருந்து தூய்மை பணியாளர்களுக்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்டு 45 குடும்பங்கள் வசித்து வந்தனர். தற்போது இந்த இடத்தில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இந்த இடம் அருந்ததியர் அல்லாதவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆணையருக்கு சொந்தமான இடம் என பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு அருந்ததியருக்கு வழங்கப்பட்ட இடத்தை ஆணையர் என்று பெயர் மாற்றம் செய்ததோடு அருந்ததியர் அல்லாதவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்ததை கண்டித்தும், மாநகராட்சி அந்த இடத்தை கையகப்படுத்தும் முயற்சியை கண்டித்தும் அருந்ததியர் இன மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதுகுறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் இளமதி கூறும் போது " மன்னர்கள் காலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட இடம், தற்போது மாநகராட்சி கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதன் மூலம் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தெருவில் நிற்கும் சூழ்நிலையும் ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனடியாக அந்த முயற்சியை கைவிட வேண்டும் " என கூறினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.