மகளிர் உரிமைத் தொகை; செப்-15 ல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

மகளிர் உரிமைத் தொகை; செப்-15 ல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி நடைபாதையில் வணிகம் செய்யும் பெண்கள், வேளாண் பணிகளில் ஈடுபடும் பெண்கள், மீனவ பெண்கள் உள்ளிட்ட தகுதிபடைத்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 கிடைக்கும் வகையில் 1 கோடி பேருக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கான விண்ணப்பம் நியாய விலைக் கடை ஊழியர்கள் மூலம் பொது மக்களுக்கு வீடு வீடாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது சிறப்பு முகாம்களில் பொது மக்கள் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை வழங்கி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 5 லட்சம் பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் செல்போன் மூலம் தகவல் அனுப்பப்பட உள்ளது. இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் இதற்கான தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்று குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:என்.எல்.சி விவகாரம்: வாய்க்கால் தோண்டும் பணி 6 வது நாளாக தீவிரம்...!