ஆளுநரை கண்டித்து பேரவையில் முதலமைச்சர் இன்று தனி தீர்மானம்..!

ஆளுநரை கண்டித்து பேரவையில் முதலமைச்சர் இன்று தனி தீர்மானம்..!

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சட்ட மசோதாவிற்கு, ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வரும் நிலையில் ஆளுநரை கண்டித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் இன்று தனி தீர்மானம் கொண்டு வருகிறார்.

தனித் தீர்மானத்தில் பேசும் முதலமைச்சர், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள அரசுக்கு, தமிழ்நாடு மக்களின் தமது எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய அரசமைப்புச் சட்டத்தின்படியான பொறுப்பும் உள்ளதாக தெரிவிக்க உள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி அளிக்காமல், காலவரையின்றி கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டு மக்களின் நவனுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதை வருத்தத்துடன் பதிவு செய்வதாக முதலமைச்சர் குறிப்பிட உள்ளார்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவர் வகிக்கும் பதவி, எடுத்துக் கொண்ட பதவிப் பிரமணம் ஆகியவற்றுக்கும், மாநிலத்தின் நிர்வாக நலனுக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதோடு, அரசமைப்புச் சட்டத்திற்கும், கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிராக அமைந்திருப்பதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்ட உள்ளார்.

தமிழ்நாடு சட்ட பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில், பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டும் என ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும்  ஒருமனதாக வலியுறுத்துவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட உள்ளார்.