"ஊழலற்ற ஆட்சிமாற்றத்திற்கு தெலங்கானா தயாராகி வருகிறது" -பிரதமர் மோடி!

கறுப்புப் பணம் மூலம் விவசாயத் திட்டங்கள் ஊழலுக்கு உள்ளாவதாகவும், ஊழலற்ற ஆட்சிமாற்றத்திற்கு தெலங்கானா தயாராகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மஞ்சள் விவசாயிகளின் முக்கியத்துவத்தை அறிந்து தேசிய மஞ்சள் வாரியத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மெகபூப்நகருக்கு பிரதமர் மோடி சென்றார். திறந்த வாகனத்தில் சென்றடைந்த அவருக்கு, பாரம்பரிய நடனங்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள் வெகு உற்சாக வரவேற்பளித்தனர். 

தொடர்ந்து சாலை, ரயில், உயர்கல்வி என 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும்  ஐதராபாத் - ராய்ச்சூர் ரயில் சேவையை காணொலி வாயிலாக கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்குவதாகக் கூறினார். தெலங்கானா விவசாயிகள் அதிகளவு மஞ்சளை உற்பத்தி செய்வதாகவும், இதன் மூலம் மஞ்சளின் முக்கிய உற்பத்தியாளராக இந்தியா திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார். மஞ்சள் விவசாயிகளின் முக்கியத்துவத்தை அறிந்து தேசிய மஞ்சள் வாரியத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பேரணி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆட்சியில் ஊழல் மற்றும்  விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். கறுப்புப் பணம் மூலம் விவசாயத் திட்டங்கள் ஊழலுக்கு உள்ளாவதாகவும், ஊழலற்ற ஆட்சிமாற்றத்திற்கு தெலங்கானா தயாராகி வருவதாகவும் கூறினார்.

குடும்ப நலனுக்காக மட்டுமே உழைக்கும் கே.சி.ஆர் அரசு, ஜனநாயகத்தை குடும்ப லாபத்திற்காக பயன்படுத்தி வருவதாகவும் மாநிலத்தின் இயக்குநர், பொருளாளர், மேலாளர் என அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பிரதமர் கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிக்க: குன்னூர் விபத்து பிரதமர் குடியரசுத் தலைவர் இரங்கல்!