மோசமான சாலையால் அவதிப்படும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்...! முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த மக்கள்..!

மோசமான சாலையால் அவதிப்படும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்...! முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த மக்கள்..!

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

மேலும் மாஞ்சோலை மற்றும் அதன் அருகேயுள்ள சுற்றுலா பகுதிகளான நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து, குதிரை வெட்டி போன்றவற்றிக்கு செல்லக்கூடிய சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக வனத்துறையினர் உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கு மக்கள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.

இந்த நிலையில் மாஞ்சோலை பகுதியில் தி.மு.க கவுன்சிலர் ஸ்டாலின் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், முதலமைச்சர் பல்வேறு கிராமங்களுக்கும், மலைப்பிரதேசங்களுக்கும் செல்கிறார். அங்கு அதிகாரிகள் சென்று அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கின்றனர், அதேபோல் எங்களுக்காக முதல்வர் ஒரே ஒரு முறை மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளுக்கு வருகை தந்தால் எங்களுக்கும் ஒரு விடிவுகாலம் வந்து, சாலை வசதி செய்து கொடுப்பார்கள், முதல்வர் பாதம் தொட்டு கேட்கிறோம், ஒருமுறை எங்கள் பகுதிக்கு வாருங்கள் என பேசியுள்ளார்.