"தமிழகத்தின் தென்பகுதி பட்டியலின இளைஞர்களுக்கு மிகக் கடுமையான கொடுமை நடந்துள்ளது" தமிழிசை!

"தமிழகத்தின் தென்பகுதி பட்டியலின இளைஞர்களுக்கு மிகக் கடுமையான கொடுமை நடந்துள்ளது" தமிழிசை!

மத்திய புலனாய்வு நிறுவனங்கள் சோதனை மேற்கொள்வதை அரசியலாக்க கூடாது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "புலனாய் நிறுவனங்களுக்கு என்ன சந்தேகம் இருக்கிறதோ, அதை வைத்து ஆய்வு மேற்கொள்வார்கள். அதை அரசியல் ஆக்கக்கூடாது. இதற்கு முன்னால் சோதனை செய்யப்பட்ட இடத்தில் எதுவும் கிடைக்கவில்லை என்றால்,  குறை கூறலாம். அதை அரசியல் காரணம் என்று கூற கூறலாம். ஆனால் பெட்டி பெட்டியாக பணம் கிடைக்கின்ற பொழுது,  உண்மை இருக்கின்றது என்று தானே ஓரளவிற்கு அர்த்தம்" எனக் கூறியுள்ளார்.

மேலும், "நேர்மையாக இருந்தால் எதுவும் இல்லை,  கணக்கு வழக்கு சரியாக இருந்தால் பிரச்சனை இல்லை கணக்கில்லாமல் இருந்தால் தான் பிரச்சனை.  நேர்மையாக இருந்தால் சந்தேகப்பட வேண்டியது இல்லையே" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், " தமிழ்நாட்டின் தென்பகுதியில் பட்டியலின இளைஞர்களுக்கு மிக கடுமையான கொடுமை நடந்து இருக்கிறது. இதுவே உத்தர பிரதேசத்தில் நடந்திருந்தால்  எப்படி பேசுவார்கள் இவர்கள் என நமக்கு தெரியும். அந்த அளவிற்கு  கொடுமையான சூழல் இருக்கும் பொழுது, நம் மாநிலத்தில் இருக்கும் பிரச்சனையை பார்க்க வேண்டும். அது பார்க்காமல் அங்கு சரியில்லை இங்கு சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது தவறானது என்பது எனது கருத்து" என தெரிவித்துள்ளார்.