"தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்" அன்புமணி!

தமிழகத்தில் தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் நடக்கவில்லை ; தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தமிழியக்கத்தின் ஆறாம் ஆண்டு விழா சென்னை சைதாப்பேட்டையில் தமிழியக்கம் தலைவர் வி.ஐ.டி.விசுவநாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பொன்னையன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
நிகழ்ச்சி மேடையில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் நடக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் வழி கல்வியை வலியுறுத்தினோம். ஆனால் தமிழ் வளர்ச்சி பெரிய அளவில் இல்லை. தமிழுக்காக தொடங்கப்பட்ட மக்கள் தொலைக்காட்சிக்கு அரசு விளம்பரம் வருவதில்லை. வணிக ரீதியில் மக்கள் தொலைக்காட்சி தோல்வியை சந்தித்துள்ளது. தமிழ் தமிழ் என்று சொல்லும் தமிழக அரசு விளம்பரம் கொடுத்திருக்கலாமே என்றார். 

தமிழகத்தில் தமிழை காணவில்லை. வணிக வளாகங்கள் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கிறது. நம்முடைய பெருமையான தமிழை அனைவரும் இணைந்து வளர்க்க வேண்டும் என கூறினார். மேலும், இளைஞர்களுக்கு மொழி சார்ந்த வேலை வாய்ப்புகள் உருவாக்க வேண்டும். அரசியல் கடந்து தமிழ் தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். நமது இலக்கு தாய்மொழியை உலகின் முதன்மை மொழியாக மாற்றுவது தான் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், ஒரு ஜனநாயகம் என்று சொன்னால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஒரு மனிதன் சாதியினால் கோயிலுக்கு உள்ளே செல்ல முடியாத நிலை தற்பொழுதும் கூட இருக்கிறது. ஏற்றத்தாழ்வான சமூகம் இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும் எனவும், சாதியினால் இழிவு படுத்துவதை விட வேறு ஒரு கொடுமை இந்த உலகில் எதுவும் இருக்காது என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், இந்தியை எதிர்த்து போராடினோம் அந்த இடத்தில் ஆங்கிலத்தை கொண்டு வந்து வைத்து விட்டோம் அதில் தான் நாம் தவறு செய்து விட்டோம். அங்கு நாம் தமிழை கொண்டு வந்து வைத்து இருக்க வேண்டும். ஆங்கிலம் படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று நினைக்க வைத்து விட்டார்கள். மேலும், படிப்படியாக கல்லூரி, பள்ளிகளில் இருந்து தமிழை விளக்கி விட்டு எப்படி நாம் தமிழை வளர்க்க போகிறோம் என தெரிவித்தார்.

இதையும் படிக்க: கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி சாலை மறியல் அறிவிப்பு..!