"உலகமே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது, தமிழ் விஞ்ஞானிகள்" மு.க.ஸ்டாலின் புகழாரம்!

"உலகமே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது, தமிழ் விஞ்ஞானிகள்" மு.க.ஸ்டாலின் புகழாரம்!

உலகமே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது தமிழ் விஞ்ஞானிகள் தான் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

சாதனை படைத்த தமிழ்நாட்டை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகளுக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, சந்திரயான் மற்றும் ஆதித்யா விண்கலங்களை விண்ணிற்கு அனுப்பி சாதனை படைத்த, தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள், கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி.நாராயணன், ஏ.ராஜராஜன், மு.வனிதா, வீரமுத்துவேல், நிகர் ஷாஜி, எம்.சங்கரன், ஜெ. ஆசிர் பாக்கியராஜ் ஆகிய 9 விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். 

விஞ்ஞானிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், அவர்கள் 9 பேருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

முன்னதாக உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர்களின் அறிவு தனித்தன்மை வாய்ந்தது என்றும், தமிழ்நாட்டை  சேர்ந்த விஞ்ஞானிகளின் செயல், நாட்டிற்கே பெருமை அளிக்கிறது என்றும் புகழாரம் சூட்டினார். அத்துடன், அரசு பள்ளியில் பயின்று, சாதனை படைத்த இந்த விஞ்ஞானிகளை வழிகாட்டியாக ஏற்று தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிக்க: "சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்க இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது "-உயர் நீதிமன்றம்!