”இந்தியாவில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக வர வேண்டும்” இந்த பயணம் நிச்சயம் துணை நிற்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக வர வேண்டும் என பணியாற்றி வருவதாகவும், அதற்கு அபுதாபி பயணம் நிச்சயம் துணை நிற்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”இந்தியாவில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக வர வேண்டும்” இந்த பயணம் நிச்சயம் துணை நிற்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சட்டப்பேரவையில், நிதியமைச்சர் கடந்த 18-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தொடர்பாகவும், திட்டங்கள் தொடர்பாகவும் சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலுரை வழங்கினர். இதனை தொடர்ந்து, சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில், நிதியமைச்சரும், வேளாண் அமைச்சரும் பட்ஜெட் தாக்கல் செய்து பாராட்டை பெற்றிருக்கிறார்கள் என்றும், வெளிநாடுகளே பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறினார். 

மேலும், பல துறைகள் இருந்தாலும் அதில் முக்கியமானது நிதித்துறை என கூறிய அவர், அதில் தனது அனுபவங்களை வைத்து பட்ஜெட்டை தாக்கல் செய்து பாராட்டுக்குரியவராக விளங்குகிறார்  பழனிவேல் தியாகராஜன் எனவும் பெருமிதம் கொண்டார். அதேபோல், வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ள அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும் தமது பாராட்டுக்கள் எனவும் முதலமைச்சர் கூறினார்.

இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியிருப்பதாக குறிப்பிட்ட அவர், பலர் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்துகொண்டு உள்ளதாகவும், இதை சட்டரீதியாக கையாள்வது குறித்து மத்திய அரசுடன் பேசி வருவதாகவும் விரைவில் விடிவுகாலம் வரும் எனவும் உறுதியளித்தார். 

அபுதாபி பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு எதிர்க்கட்சிகள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறிய அவர், நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதல்ல, இந்தியாவில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக வர வேண்டும் என்று தான் நாம் பணியாற்றி வருகிறோம் என்றும், அதற்கு அபுதாபி பயணம் நிச்சயம் துணை நிற்கும் எனவும் தெரிவித்தார்.