"பொருளாதாரத்தில் தமிழ்நாடு இரண்டாம் இடம்" அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!

"பொருளாதாரத்தில் தமிழ்நாடு இரண்டாம் இடம்" அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!

இந்திய அளவில் தமிழ்நாடு பொருளாதாரம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில், மாநில திட்டக் குழு அலுவலகத்தில் தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறித்த கணிப்பை தமிழ்நாடு அரசின் பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை தயாரித்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து, மாநில திட்டக் குழு அலுவலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு மற்றும் மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் ஆகியோரது செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. 

அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் உற்பத்தி மதிப்பில் நிலைத்து உள்ளது. ஒன்றிய உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கானது 2021- 22 நிலைத்த நிலையில் 9.0 சதவீதமாகவும் நடப்பு விலையில் 8.8% ஆகவும் காணப்படுகிறது. 2022-23 ஆண்டுக்கான நிலைத்த விலை 9.1% ஆகவும் நடப்பு விலையில் 8.7 சதவீதமாகவும் காணப்படுகிறது எனக் கூறினார்.

2021 22 ஆம் ஆண்டின் நடப்பு விலையில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்திய ஒன்றிய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் நிலைத்த விலையில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் திகழ்ந்து வருவதாக தெரிவித்த அவர்,  2022 -23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய மற்ற மாநிலங்களின் உற்பத்தி மதிப்பீடுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது என தெரிவித்தார். மேலும் நமது மாநில பொருளாதாரம் 2021-22 ஆம் ஆண்டில் நிலைத்த விலையில் 7.92 சதவீத அளவிலும் 2022-23 ஆம் ஆண்டில் 8. 19 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி கண்டுள்ளது. நடப்புவிலையில் வளர்ச்சியின் அளவு  15.84 சதவீதமாக 2021-22 ஆம் ஆண்டிலும் 14.16 சதவீதமாக 20223 ஆம் ஆண்டிலும் இருக்கிறது எனக் கூறினார்.  


கொரோனா தொற்றுக்குப் பிறகு வளர்ச்சி வேகம் பிடித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சராசரியாக 8% என்ற அளவில் நமது பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என குறிப்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, கொரொனா காலத்திற்கு பிறகு பொருளாதாரம் வளர்ந்துள்ளது எனவும், தனிநபர் ஆண்டு வருமானம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது எனவும் கூறினார். மேலும்  அதற்கு 2 ஆண்டுகளில் தமிழக முதலமைச்சரின் அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களே காரணம் என்றார்.

அடுத்ததாக பேசிய மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன், இலவச பேருந்து திட்டத்தின் மூலம் 900 ரூபாய் ஒரு குடும்பத்திற்கு செலவு குறைந்துள்ளது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்தது. அதேபோல் தான் காலை உணவு சிற்றுண்டி திட்டம் மூலம் என்ன பலன் கிடைக்கும் என்று ஆய்வு செய்த பிறகு தான் தெரியும் என்றார். மேலும், காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாடு குறித்து மூன்று மாதத்திற்கு பிறகு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் தரம் கண்டறியப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிக்க:வானத்தில் மிதக்கும் சுற்றுலா பயணிகள்; கேரள அரசின் புதிய முயற்சி!