மாற்றப்படுகிறாரா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.? புதிய ஆளுநர் யார்.?

மாற்றப்படுகிறாரா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.? புதிய ஆளுநர் யார்.?

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் இன்று மாலை  பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேச உள்ளார்.

அப்போது  தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வார் என தெரிகிறது. மேலும், மேகதாது அணை, 7 பேர் விடுதலை, நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட தமிழக அரசின் கோரிக்கைகளை, பிரதமரிடம் எடுத்துரைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால் அவரது டெல்லி பயணத்தின் பின்னணி என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழக ஆளுனர் பதவியில் இருந்து பன்வாரிலால்  புரோகித் மாற்றப்படலாம் என்றும் அவருக்கு  பதிலாக தமிழகத்திற்கு புதிய ஆளுனரை நியமிக்க  வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தமிழகத்திற்கு வலிமையான ஆளுநர் தேவை என நினைக்கும்  பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சராக இருந்த ரவி சங்கர் பிரசாத், ரத்தன் லால் கட்டாரியா, பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரில் ஒருவரை களமிறக்க முடிவு செய்துள்ளது. இதில் ரவி சங்கர் பிரசாத், ரத்தன் லால் கட்டாரியா ஆகிய இருவருக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது தெலுங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்திர ராஜன், புதுச்சேரியை கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இதனால் புதுச்சேரி அல்லது தெலுங்கானா ஆளுனராக  பன்வாரிலால் புரோகித்  நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.