தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழ்நாட்டில் 6 கோடியே 11 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாகவும், அதில்  3 கோடி ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 10 லட்சம் பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலின வேட்பாளர்கள் 8 ஆயிரத்து 16 பேர் உள்ளதாகவும்  கூறினார். 

அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 52 ஆயிரம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூரில் 1 லட்சத்து 69 ஆயிரம் வாக்காளர்களும் உள்ளதாக சத்யபிரதா சாஹூ  தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியை இன்றுமுதலே மேற்கொள்ளலாம் என்றார். தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவும், Voter help mobile app வாயிலாகவும் இந்த தங்கள் பெயரை சேர்ப்பது, நீக்குவது ஆகியவற்றை வாக்காளர்கள் செய்து கொள்ளலாம் என சத்யபிரதா சாகு தெரிவித்தார். இதுமட்டுமல்லாது வரும் நவம்பர் மாதம் 4, 5, 18, 19-ம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு தமிழநாட்டில் 6 கோடியே 20 லட்சமாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 6 கோடியே 11லட்சமாக குறைந்துள்ளதாக கூறினார். வாக்காளர் பட்டியலின் சரிபார்ப்பு பணிகள் வருகிற டிசம்பர் மாதம் 9-ம் தேதி வரை நடைபெறும் என்று குறிப்பிட்ட சத்யபிரதா சாகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படும் என்றார்.