சுவாமிநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா...! பக்தி பரவசத்தில் பக்தர்கள்...!

சுவாமிமலையில் அமைந்துள்ள சுவாமிநாத சுவாமி கோயிலின், 7 ஆம் ஆண்டு சம்வஸ்திரா அபிஷேகத்தை முன்னிட்டு, இன்று புனிதநீர் கடங்களை ஸ்தாபித்து, சிறப்பு ஹோமம் நடத்தி, மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

சுவாமிநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா...!  பக்தி பரவசத்தில் பக்தர்கள்...!

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை, முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். தமிழ் வருட தேவதைகள் அறுபது பேரும், அறுபது படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வருகை தரும் முருக பக்தர்களுக்கு, சேவை செய்வதாக ஐதீகம். கட்டுமலை கோயிலான இது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்றது. இத்தலத்தில் தான் தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் மந்திரப் பொருளை முருகன் குருவாக இருந்து உபதேசம் செய்ததால் அவர் சுவாமிக்கே நாதன் ஆனார். இதனால் இங்கு முருகப்பெருமான் சுவாமிநாதசுவாமி என போற்றி வணங்கப் பெறுகிறார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்திற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, இன்று 7 ஆம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தில், சம்வஸ்திரா அபிஷேக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, புனிதநீர் நிரப்பிய கடங்களை, பல்வேறு விதமான மூலிகை பொருட்களை கொண்டு சிறப்பு யாகம் வளர்த்து, அதன் பூர்ணாஹதிக்கு பிறகு, மகா தீபாராதனை செய்யப்பட்டு, மேள தாளம் முழங்க, கடங்கள் புறப்பட்டு, மலை கோயிலை சென்றடைந்தது. அங்கு மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு, மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.