தொழிற்சங்கம் தொடங்கிய 127 பணியாளர்கள் பணி இடைநீக்கம்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சங்கம் தொடங்கிய 127 நிரந்தர பணியாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடத்தில் உள்ள சிப்காட்டில் யுனிபிரஸ் என்னும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு கார்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரித்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த தொழிற்சாலையில் பணி புரியும் நிரந்தர தொழிலாளர்கள் 127 பேர் தங்களின் நலனுக்காக நிறுவனத்திடமிருந்து தங்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக சி ஐ டி யு தொழிற்சங்கத்தில் இணைந்து தொழிற்சங்கம் ஆரம்பித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த யுணி பிரஸ் தொழிற்சாலை நிர்வாகம் 127 பேரையும் அழைத்து நீங்கள் தொழிற்சங்கத்தை கைவிட வேண்டும், இல்லை என்றால் 127 பேரையும் பணி இடைநீக்கம் செய்கிறோம் என்று சொல்லி கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி தொழிலாளர்களை பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.

அன்று முதல் இன்றுவரை 50 நாட்களாக தொடர்ந்து தொழிற்சாலை  அருகில் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர்கள் துறை கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் முறையிட்டும் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் நிறுவனம் முன் வராததால் திக்கற்றவர்களாக கைவிடப்பட்டவர்களாக வருமானத்தை இழந்து தவித்து வருவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

ஆகவே தமிழக அரசு தலையிட்டு தொழிற்சாலை நிர்வாகத்தை அழைத்து தொழிலாளர்கள் நல சங்கம் அமைக்கவும், எங்களுக்கு மீண்டும் பணி வழங்க பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் என்று மிகவும் வேதனையோடு கூறுகின்றனர்.

இதையும் படிக்க: போலீசுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!