வெகுவிமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி...அலைக்கடலென திரண்ட பக்தர்கள்!

திருச்செந்தூரில் அலைக்கடலென திரண்டிருந்த லட்சகக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சூரபத்மனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

சூரனை வேல் கொண்டு முருகப்பெருமான் வதம் செய்ததை கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

இந்த நிலையில் கந்தசஷ்டியின் சிகர நிகழ்ச்சி திருச்செந்தூர் கடற்கரையில்  இன்று  நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு பார்வதி தேவி தன் சக்தி மிகுந்த வேலை கொடுக்க  மாலை 4 மணியளவில் சூரபத்மனுக்கு எதிரான போருக்கு முருகப்பெருமான் புறப்பாடு நடைபெற்றது. கடற்கரையில் அலைக்கடலென திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக  அரங்கேறியது. 

முதலில் யானை முகத்துடன் வந்த கஜமுகாசுரனை வேல் கொண்டு அழித்தார் ஜெயந்தி நாதர்.. இதையடுத்து சிங்க முகத்துடன் வந்த சிங்கமுகாசூரனையும் முருக பெருமான் வதம் செய்தார்.

தொடர்ந்து வந்த தாரகா சூரனையும் சம்ஹாரம் முருகன் சக்தி வேல் கொண்டு அழித்தார். இறுதியில் தோல்வியை ஏற்காத சூரபத்மன் ஒரு மாமரமாக மாறியபோது முருகப்பெருமான் அந்த மரத்தை தனது வேல் கொண்டு இரண்டாகப் பிளந்தார்.  ஒரு பகுதியை மயிலாகவும்,  மற்றொரு பகுதியை சேவலாகவும் மாற்றி தனது வாகனமாகவும் கொடியாகவும் முருகப்பெருமான் ஏற்றுக்கொண்டார். 

தத்ரூபமாக நடந்த  சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள்  கண்டுகளித்தனர். முன்னதாக நிகழ்ச்சியை காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் திருச்செந்தூர் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.