சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு..!

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு..!

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுவாக திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாள்தோறும் பல்வேறு கோரிக்கைகளை வட்டாட்சியரிடம் பொதுமக்கள் நேரடியாக வந்தும், மனுக்கள் மூலமாகவும் அளித்து வருகின்றனர். 

இது மட்டுமல்லாமல் திருப்பத்தூர் பகுதி மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், மக்கள் குறைதீர்க்கும் நாள் அன்று சென்று அங்கும் மனுக்கள் அளித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் இன்று திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின் போது, அலுவலர்களின் வருகை பதிவேடு, கொரோனா தடுப்பு நடவடிக்கை, மக்களின் கோரிக்கை மனுக்களின் நிலை ஆகியவைகளின் நிலைகுறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எந்த வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன் அதிக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி உரிய தீர்வுகளை மனுதாரருக்கு வழங்கிட வேண்டும் எனவும் மனு மீது தொடர் நடவடிக்கைகள் இருந்தால் அதன் விவரம் குறித்து மனுதாரர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், திருப்பத்தூர் கணேஷ் நகரில் பாழடைந்து கிடக்கும் சிறுவர் பூங்காவிற்கு சென்று அங்கு நடக்கும் பணிகளையும் ஆய்வு செய்துள்ளார். பின்பு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கட்டப்படும் பணிகளின் நிலை குறித்தும், பயன்பாடு குறித்தும் கேட்டறிந்தார். அங்கு பூங்கா, சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்கள், நடைமேடை அமைப்பது குறித்து ஆய்வு செய்தவர், தொடர்ந்து சிறுவர் பூங்கா வரைபடத்தையும் பார்வையிட்டார். 

பேரூராட்சிக்கு உட்பட்ட கணேஷ் நகர் சிறுவர் பூங்கா மறு சீரமைப்பு பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்ட பொழுது பேரூராட்சி அலுவலர்கள் யாரும் இந்த ஆய்வு நிகழ்ச்சியின் போது பங்கேற்கவில்லை. மாவட்ட ஆட்சியர் திடிர் ஆய்வு பற்றி தெரியாத நிலையில் வராமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டலத்து துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் தென்னரசு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் உடன் இருந்தனர்.