தமிழகத்தில் பொது தேர்வில் சாதனை படைத்த மாணவிகள்.. விவரம் இதோ?

தமிழ்மொழி படிப்பதற்கு எளிமையாக இருந்ததாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவி துர்கா தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பொது தேர்வில் சாதனை படைத்த மாணவிகள்.. விவரம் இதோ?

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி துர்கா, 500க்கு 448 மதிப்பெண் பெற்றுள்ளார். இதில் தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமைக் காவலரின் மகளான மாணவி துர்காவுக்கு, பள்ளி முதல்வர் செல்வ வைஷ்ணவி பரிசு கோப்பை வழங்கினார். இதன் பின்னர் பேசிய மாணவி துர்கா,  தமிழ் பாடத்தில் முதல் இடம் பெற்றிருப்பது தனி சிறப்பை தந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம்  மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த முனிரத்னம் என்பவரது மகள் கீர்த்தனா 12ஆம் வகுப்பு பொது தோ்வில், தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்திருக்கிறார்.

மாநில அளவில்  தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று உள்ளார். இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவிக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனா்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரியின் மகள் சாதிகா பாத்திமா, +2 பொதுத் தேர்வில் உயிரியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். பெரும்பாளியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த சாதிகா பாத்திமா, தனக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் நல்ல ஊக்கம் அளித்ததாக கூறினார்.