தேர்வுகளை ஆன்லைனில் நடத்த கோரி மாணவர்கள் போராட்டம்...

தேர்வுகளை ஆன்லைனில் நடத்த கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தேர்வுகளை ஆன்லைனில் நடத்த கோரி மாணவர்கள் போராட்டம்...

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. மேலும் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன. பின்னர் தேர்வும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. தொடர்ந்து கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்தவுடன் மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்வை ஆன்லைன் மூலமாகவே நடத்த வேண்டும் என அவர்கள் முழக்கம் எழுப்பினர். இதைதொடர்ந்து போலீசார்  பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். 

இதேபோல் மதுரையில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மாணவர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் நடந்தே சென்று மனு அளித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.