வியாபாரிகளின் திடீர் சாலை மறியல்... வாரச்சந்தையை அனுமதிக்க வேண்டி போராட்டம்...

பரமத்திவேலூர் அருகே வாரச்சந்தை நடத்த அனுமதிக்காததால் வியாபாரிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வியாபாரிகளின் திடீர் சாலை மறியல்... வாரச்சந்தையை அனுமதிக்க வேண்டி போராட்டம்...

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வாரத்தில் ஏழு நாட்களும் கிராமங்கள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. இந்த சந்தையில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் சந்தை வியாபாரத்த்தை நம்பி பிழைப்பு நடத்தி வந்தனர். 

இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. கொரோனா 2வது அலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், வாரச்சந்தைக்கு  மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால் கடந்த வாரம் பரமத்திவேலூர் பகுதி வாரச் சந்தை வியாபாரிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாரச்சந்தை திறக்க அனுமதிக்க வேண்டும் என மனு அளித்தனர்.

இன்று கபிலர்மலையில் நடக்கும் திங்கட்கிழமை சந்தையில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கூடி கடைகளை திறந்தனர். அப்போது அங்கு சென்ற அரசு அதிகாரிகள் சந்தை நடத்தக்கூடாது எனவும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கிராம பகுதிகளில் சந்தை திறக்க மாவட்ட ஆட்சியரிடம் இருந்து எவ்வித அனுமதியும் கிடைக்கப் பெறாத நிலையில் சந்தை நடத்த கூடாது எனத் தடுத்து நிறுத்தினர். 

அப்பொழுது திடீரென வியாபாரிகள் சந்தை நடத்த அனுமதிக்கவேண்டும்  என கபிலர்மலை  ஜேடர்பாளையம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வரும் வாரங்களில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்று வழக்கம்போல சந்தை நடத்த அனுமதிக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில்  சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.