புயல் எதிரொலி...9 துறைமுகங்களில் 2 -ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

புயல் எதிரொலி...9 துறைமுகங்களில் 2 -ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

அதி தீவிர புயலாக மோச்சா புயல் மியான்மரின் சிட்வேக்கு அருகே இன்று நண்பகலில் கரையை கடக்க இருப்பதால், 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மோச்சா புயல் வடக்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் மிகத் தீவிர புயலாக மாறி மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்தது. போர்ட் பிளேயருக்கு வட- வடமேற்கில் சுமார் 720 கிலோ மீட்டா் தொலைவிலும், காக்ஸ் பஜாருக்கு தென்- தென்மேற்கில் 400 கிலோ மீட்டா் தொலைவிலும், மியான்மர்க்கு தெற்கு- தென்மேற்கில் 310 கிலோ மீட்டா் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. 

இதையும் படிக்க : வார் ரூம்-மை அலங்கரித்த தமிழர்...தாமரையை வீழ்த்தி காட்டிய ஐ. ஏ.எஸ் டீம்!

இது வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று மிக அதி தீவிர புயலாக இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை நோக்கி கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 180 கிலோ மீட்டா் முதல் 190 கிலோ மீட்டா் வேகத்திலும், இடையே மணிக்கு 210 கிலோ மீட்டா் வேகத்திலும் வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான சூறாவளிக் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த அதிதீவிர புயலால் மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.