பள்ளியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை...ட்ரோன் கேமரா மூலம் பள்ளியை படம்பிடித்த சிறப்பு குழு!

பள்ளியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை...ட்ரோன் கேமரா மூலம் பள்ளியை படம்பிடித்த சிறப்பு குழு!

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் காவல்துறை சிறப்புப் புலனாய்வு குழு நேரில் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கு:

கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு தொடர்பான விவகாரம் பூதாகரமான நிலையில் விசாரணையை தீவிரப்படுத்த தொடர் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் மாணவியின் உடல் மறுகூராய்வின்போது தங்கள் தரப்பு மருத்துவர் இருக்க வேண்டுமென, தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை மீறி பெற்றோர் இல்லாமலேயே மறுபிரேத பரிசோதனை நடத்தி விட்டதாகக் கூறிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொள்ளாததாக அரசு குற்றம்சாட்டியது. 

நீதிமன்ற தீர்ப்பு:

தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யப் போவதில்லை என தெரிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு நாளை காலைக்கு வழக்கை ஒத்திவைத்தார். இதனிடையே நாளை மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவல்துறை சிறப்புப் புலனாய்வு குழு விசாரணை:

இந்நிலையில் சேலம் சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியது. தொடர்ந்து பள்ளியில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில், அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.