அதானி துறைமுகத்திற்கு ஆறு வழிச்சாலை அமைக்கும் திட்டம்: எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் போராட்டம்!

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி  அதானி  துறைமுக வசதிக்காக ஆறு வழிச் சாலை திட்டத்திற்கு மண் பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதானி துறைமுகத்திற்கு ஆறு வழிச்சாலை அமைக்கும் திட்டம்: எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் போராட்டம்!

தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக பெங்களூருவில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் முதல் தச்சூர் வரை சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தை இணைக்கும் வகையில்  ஆறு வழிச்சாலை திட்டப்பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பள்ளிப்பட்டு மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள 34 கிராமங்கள் வழியாக 116 கிலோ மீட்டர் தொலைவிற்கு  ஆயிரத்து 238 ஏக்கர்   முப்போகம் விளையக் கூடிய விவசாய நிலங்கள் வழியாக சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் பல கட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சாலை அமைக்கும் பணிக்காக மண் பரிசோதனை நடைபெறுவதாகக் கேள்விப்பட்ட விவசாயிகள் அங்கு விரைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  முப்போகம் விளையக்கூடிய நிலங்கள் என சான்று அளிக்கப்பட்ட  இடங்களின் வழியாக சாலை அமைக்கக் கூடாது என்ற விதிமுறையை மீறி அதானி குழுமத்திற்கு வசதியாக ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டினர். திட்டத்தை கைவிட வலியுறுத்தி முழக்கமிட்ட அவர்கள்,  ஆறு வழிச்சாலை திட்டத்திற்காக அளவீடு செய்து நடப்பட்ட கற்களை பிடுங்கி எறிந்தனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.