தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையில் ஈடுபட்ட கடைகள்...! பூட்டி சீல் வைத்து அதிரடி காட்டிய ஆட்சியர்...!

தஞ்சாவூர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்த 109 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையில் ஈடுபட்ட கடைகள்...! பூட்டி சீல் வைத்து அதிரடி காட்டிய ஆட்சியர்...!

தமிழகத்தில் புகையிலை மற்றும் போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த விஷயத்தில் தான் ஒரு சர்வாதிகாரியாக கூட இருப்பேன் எனவும் அவர் எச்சரித்து இருந்தார்.

இதனையடுத்து தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், அங்கு செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் 100 மீட்டருக்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 109 கடைகளை அதிரடியாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. தஞ்சாவூர் வடக்கு வீதி பகுதியில் இரண்டு கடைகளுக்கு நேரடியாக சென்று சீல் வைத்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்டம் முழுவதும் அதிரடி ஆய்வு மேற்கொண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அந்த கடை உரிமையாளர்கள் உரிய விளக்கம் அளிக்காத பட்சத்தில் இன்று  109 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.