ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் - பாஜக வெளிநடப்பு!

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், ஆளுநர் குறித்து பேசக்கூடாது என கூறிவிட்டு, எம்.எல்.ஏக்களை பேசவிட்டு சபாநாயகர் வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டினார். துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரம் என்பதே அரசியல் சாசனம் எனவும், மசோதாக்கள் மீது உரிய விளக்கத்தை கேட்பது ஆளுநரின் கடமை என்வும் கூறினார்.  

இதையும் படிக்க : ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர்...!

தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் குறுக்கிட்டு பதிலளிக்கவே, நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் நயினார் நாகேந்திரன் பேசும்போது, சட்டமன்றம் பொதுக்கூட்ட மேடையாகக் கூடாது என்று கூறிய வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், திமுக அரசு தனது செல்வாக்கை இழந்து கொண்டிருக்கிறது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.