செந்தில் பாலாஜி அமைச்சராகவே தொடர்வார்? மாறுகிறதா தமிழ்நாடு அமைச்சரவை!

செந்தில் பாலாஜி  அமைச்சராகவே தொடர்வார்? மாறுகிறதா தமிழ்நாடு அமைச்சரவை!

அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வாரா என்ற கேள்வி நிலவி வரும் நிலையில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 

கடந்த அட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி ஊழலில் ஈடுபட்டதற்கு தொடர்பான வழக்கில் மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 8 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், நேற்றைய தினம் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அரசு இல்லத்திலும், கரூரில் அமைச்சருக்கு சொந்தமான இல்லத்திலும் முதலில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், அடுத்தபடியாக தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

சுமார் 18 மணி நேரம் நீடித்த சோதனையானது நிறைவு பெற்ற நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால், போலீசார் அவரை நள்ளிரவில் கைது செய்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஆஞ்சியோவுக்கு பரிந்துரை செய்து அதற்கான பரிசோதனை செய்தனர். அதில் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 இடங்களில் இரத்தக்குழாய் அடைப்பு இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அமைச்சர் கைது நடவடிக்கை - நீதிமன்றத்தை நாட முடிவு?

இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழுமா? என்றெல்லாம் அரசியல் பார்வையாளர்களிடம் கேள்வி எழும்பியது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டால், செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி அவர் வசமே இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அமைச்சர் நிர்வகித்த துறைகளின் நிர்வாகம் மட்டும்  தற்காலிகமாக மற்ற அமைச்சர்களுக்கு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டால் அவர் கவனித்து வரும் துறைகளின் நிர்வாகம் பாதிக்கப்படும் என்பதால், அந்தச் சூழலில் நிர்வாக வசதிக்காக துறைகள் கவனிக்கும் பொறுப்பு மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் மூத்த  அமைச்சர்களில் ஒருவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாகவும், இல்லையென்றால் முதலமைச்சரே நேரடியாக அந்த பொறுப்புகளை கவனிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, திமுகவில் நிகழபோகும் அடுத்தக்கட்ட மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் அதை பொறுத்திருந்து பார்ப்போம்.....