குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்பிலான 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

சென்னை குன்றத்தூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்பிலான 2 டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்பிலான 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், சுபாஷ் சந்திரபோஸ் தெருவிலுள்ள ஒரு குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து நுண்ணறிவு பிரிவின் உதவி வன பாதுகாவலர் மகேந்திரன், சென்னை வன காவல் நிலையத்தின் வன சரக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது அங்கு பூட்டப்பட்டு இருந்த குடோனின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சுமார் 2 டன் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் ஏற்றுமதி செய்வதற்காக தயார் நிலையில் கோணிப்பையால் சுத்தப் பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான குடோனை கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மதுரவாயலை சேர்ந்த அமீர் என்பவர் ஷோபா மற்றும் மெத்தைகள் தயாரித்து ஏற்றுமதி செய்வதற்காக வாடகைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது.

கடந்த சில மாதங்களாக வாடகை தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அங்கிருந்த 2 டன் செம்மரக்கட்டைகள் அறுக்க பயன்படுத்தும் இயந்திரம், எடை மிஷின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டை மதிப்பு சுமார் ரூ.2 கோடி வரை இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்