அச்சத்துடன் ஆற்றை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்...! தரைப்பாலம் அமைக்க கோரிக்கை...!

வேப்பூர் அருகே மேமாத்தூர் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் மணிமுத்தாற்றின் நீரில் கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள்

அச்சத்துடன் ஆற்றை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்...! தரைப்பாலம் அமைக்க கோரிக்கை...!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மேமாத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்திற்கு அடிப்படை வசதியான பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் மணிமுத்தாற்றை கடந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று தான் பேருந்தில் செல்ல வேண்டும். இதனால் கர்பிணி பெண்களும்,பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள வண்ணாத்தூர், நல்லூர், வேப்பூர் ஆகிய பகுதியில் சென்று படித்து வருகின்றனர். கல்லூரி மாணவ, மாணவிகளும் விருத்தாசலம் அரசு கல்லூரிக்கு சென்று பயின்று வருகின்றனர். 

இந்த நிலையில் பெரும் அவதிப்பட்டு வரும் மக்கள், மழைக்காலங்கள் இல்லாத போது அவர்கள் மணிமுத்தாற்றை கடந்து சென்று பேருந்தில் செல்கின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் மணிமுத்தாற்றில் மழை நீர் செல்வதால் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் தங்களது முழங்கால் அளவு தண்ணீரில், அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. அதற்கும் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்று  10 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால்  குறித்த நேரத்திற்கு பள்ளி செல்ல முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். தங்களுக்காக பள்ளி நேரத்திலாவது, கிராமத்திற்கு பேருந்தை இயக்க வேண்டும் அல்லது  ஆற்றில் தரைப்பாலமாவது  அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.