எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். கொள்ளை.. அரியானாவில் மேலும் ஒருவர் கைது

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் தொடர்பாக, மேலும் ஒரு கொள்ளையனை தனிப்படை போலீசார் அரியானாவில் கைது செய்துள்ளனர். 

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். கொள்ளை.. அரியானாவில் மேலும் ஒருவர் கைது

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் எந்திரங்களின் வாயிலாக நூதன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். இதில் முக்கிய கொள்ளையனான அமீர் என்பவரை கைது செய்த போலீசார், அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

தங்களுக்கு கொடுத்த வேலையை மட்டும் செய்ததாகவும், அரியானாவின் மேவாட் பகுதியை சேர்ந்த மற்ற கொள்ளையர்கள் பற்றி தெரியாது எனவும் வாக்குமூலம் அளித்த அமீர், தமது நண்பர் வீரேந்தருடன் சென்னை அரும்பாக்கத்தில் அறை எடுத்து தங்கி, ஏ.டி.எம். கொள்ளையை அரங்கேற்றியதாக கூறியுள்ளார்.

இதனிடையே, அரியானாவின் மேவாட் பகுதியில் முகாமிட்டு, அம்மாநில போலீசாருடன் இணைந்து மற்ற கொள்ளையர்களை தீவிரமாக தேடி வரும் தமிழக தனிப்படை போலீசார், வீரேந்தர் என்ற மேலும் ஒரு கொள்ளையனை கைது செய்துள்ளனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பல தகவல்கள் கிடைக்கலாம் என்றும், அதன் மூலம் மற்ற கொள்ளையர்களை விரைவில் பிடிபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.