ஊரக உள்ளாட்சி தேர்தல்: புதிய கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம்  

வேட்புமனுத் தாக்கலின் போது, வேட்பாளர் மட்டுமே மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று புதிய கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.  

ஊரக உள்ளாட்சி தேர்தல்: புதிய கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம்   

தமிழ்நாட்டில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பகுதிகள் மற்றும் எஞ்சிய 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், அதற்கு புதிய கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேட்பாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என்றும், ஒருவேளை வேட்பாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவரை முன்மொழிபவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம் என்று கட்டுப்பாடுகளை ஆணையம் விதித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தவிர, வேட்புமனுக்களை வரும் சனிக்கிழமையும் தாக்கல் செய்யலாம் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர்களின் விவரங்கள் https://tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.