வட மாநில தொழிலாளர்கள் வதந்தி... ஜாமீன் மனு விசாரணை!!

வட மாநில தொழிலாளர்கள் வதந்தி... ஜாமீன் மனு விசாரணை!!

வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பியதாக உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவிற்கு எதிராக திருப்பூரில் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என காவல்துறை விளக்கமளித்துள்ளது.

வதந்தி:

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக ட்விட்டர் மூலம் வதந்தி பரப்பியதாக, உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.  தூத்துக்குடியில் பதிவான வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் பெற்ற உம்ராவ், திருப்பூரில் புகார் தொடர்பாக முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  

அதில், தமது ட்விட்டர் கணக்கை முடக்கி, இந்த தகவல் பதிவு செய்யப்பட்டதாகவும், அதற்கும், தனக்கும் தொடர்பு இல்லை எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

விசாரணை:

இந்த மனு  நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, உம்ராவ் மீது திருப்பூரில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதனையேற்ற நீதிபதி, முன் ஜாமீன் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க:   புறம்போக்கு நிலங்களுக்கு பட்டாவா... வழியை கண்டுபிடித்துள்ள அமைச்சர்...!!!