திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்த விதிகளை வகுக்க வேண்டும்”- சென்னை உயர்நீதிமன்றம்.

திருமண தகவல் இணையதளங்களை  ஒழுங்குபடுத்த விதிகளை வகுக்க வேண்டும்”- சென்னை உயர்நீதிமன்றம்.

திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பெண் டாக்டர் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி 80 பவுன் நகை மற்றும் 68 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னை கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி பிரசன்னா (அ) சக்கரவர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தபோது சக்ரவர்த்தி தரப்பில் புகார் அளித்த பெண்ணுடன் தனக்கு ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம்  பழக்கம் ஏற்பட்டதாகவும், தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற அவரது ஆசையை நிராகரித்தததால், தனக்கு எதிராக புகார் அளித்துள்ளதாக வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், கிறிஸ்துவ திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்து பெண் டாக்டரான புகார்தாரரை ஏமாற்றியுள்ளதாக அளிக்கப்பட்ட இந்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

பெண் டாக்டர் தரப்பில் சக்ரவர்த்தி தன்னை டாக்டர் என கூறிக்கொண்டு, தன் பெற்றோரிடம் பேசிய பிறகு, இருவரும் பழகிய நிலையில், 68 லட்ச ரூபாயை பணமும், 80 சவரன் தங்க நகைகளையும் அபகரித்துக் கொண்டதாக தெரிவிக்க்பபட்டது. வயது முதிர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், விவகாரத்து ஆனவர்கள் ஆகியோரை  குறிவைத்து மோசடி செய்வதுதான் சக்ரவர்த்தியின் வாடிக்கை என்றும், 17 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக செய்திகள் வெளியானது என்றும் நீதிபதியின்  கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

எனவே சக்கரவர்த்திக்கு முன் ஜாமீன் கொடுக்க கூடாது என்று இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டீக்காராமன், முன் ஜாமீன் கோரிய சக்ரவர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவரது உத்தரவில், திருமண இணையதள மோசடிகளில் பெரும்பாலும் பெண்களே ஏமாற்றப்படுவதாகவும், ஆனால் இதுபோன்ற இணையதளங்களை கட்டுப்படுத்த எந்த ஒரு சட்டமோ, விதிகளோ உருவாக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, பதிவு செய்யும் ஆணோ அல்லது பென்ணோ அவர்களது பாஸ்போர்ட், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற விதி இருந்திருந்தால், மோசடிகள் தடுக்கப்படும் என்றும், மீறி நடந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே திருமண தகவல் இணைதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க   | ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்கள் கைது...!