ரூ.200 கோடிக்கு பட்டாசு வர்த்தகம் பாதிப்பு..!! வருத்தத்தில் பட்டாசு வணிகர்கள்..!

டெல்லியில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை! ரூ.200 கோடிக்கு பட்டாசு வர்த்தகம் பாதிப்பு...!! மறுபரிசீலனை செய்ய பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை...

ரூ.200 கோடிக்கு பட்டாசு வர்த்தகம் பாதிப்பு..!! வருத்தத்தில் பட்டாசு வணிகர்கள்..!

பட்டாசுகளை வெடிப்பதால் காற்றில் மாசு கலப்பதாக வருகிற 2023 ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து டெல்லி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி அரசின் உத்தரவு காரணமாக சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்களும், டெல்லியில் உள்ள பட்டாசு விற்பனையாளர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக டெல்லி அரசு இதே நிலையை கடை பிடித்து வருவதை முன்னிட்டும், அதே நடைமுறையை ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநில அரசுகளும், ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பின்பற்றி வருவதும் பட்டாசு உற்பத்தியாளர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி அரசின் உத்தரவால் சுமார் ரூ. 200 கோடிக்கு மேல் பட்டாசு வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர். டெல்லி அரசின் உத்தரவு காரணமாக பொதுமக்கள் தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே இந்த பிரச்சனை குறித்து டெல்லி அரசு ஆய்வு செய்து பொதுமக்களின் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்காமல், பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு அனுமதி அளிக்க தங்களது உத்தரவை வாபஸ் பெற்று மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே டெல்லியில் உள்ள பட்டாசு வியாபாரிகள் பண்டிகை நாட்களுக்கு  பட்டாசுகளை விற்பனை செய்ய சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் பட்டாசுகளை ஆர்டர் செய்துள்ள நிலையில், தற்போது பட்டாசு ரகங்கள் டெல்லி விற்பனையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி அரசின் உத்தரவால் சிவகாசி பட்டாசு உற்பத்தியில் தொய்வு  ஏற்பட்டு, டெல்லி பட்டாசு விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி அரசின் நடைமுறையை பின்பற்றி மற்ற மாநில அரசுகளும் உத்தரவிடாமல் தடுத்து நிறுத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து நாடு முழுவதும் அனைத்து பண்டிகை கொண்டாட்டங்களின் போது பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ நடவடிக்கை எடுத்து, பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.