ஆட்டோ கவிழ்ந்து மாணவர் உயிரிழப்பு...நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் போராட்டம்...!

கடலூரில் ஆட்டோ கவிழ்ந்து உயிரிழந்த அரசுக் கல்லூரி மாணவருக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி, ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் தந்தை பெரியார் அரசு கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது.  நேற்று முன் தினம் கல்லூரி முடிந்து மாணவர்கள் பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். மாணவர்கள் சென்ற ஆட்டோ எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததில் தமிழ்ச் செல்வன் என்ற மாணவர் உயிரிழந்தார். 

இதனால் நேற்று கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.  இன்று வழக்கம் போல், கல்லூரிக்கு வந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தமிழ்ச்செல்வன் உயிரிழப்புக்கு நீதி கேட்டும், உரிய பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் எதிர்ப்பையும் மீறி நடைபயணம் மேற்கொண்டனர்.

இதையும் படிக்க : மிசோரம், சத்தீஸ்கர் மாநில தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்!

நடைப்பயணம் மேற்கொண்ட மாணவர்கள் உயிரிழந்த மாணவன் தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதாது என்றும், கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரியும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட  மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

பேருந்துகள் சரி வர இயக்கப்படாததால்தான் மாணவ, மாணவிகள் ஆட்டோவில் சென்று விபத்தில் சிக்குவதாக கூறும் மாணவர்கள் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.