நடத்துனரை தாக்கிய பள்ளி மாணவர்கள்...பேருந்தை சாலையில் நிறுத்தி போராட்டம் நடத்திய ஓட்டுநர்கள்....சென்னையில் பரபரப்பு...!!

சென்னை ஓட்டேரியில் பேருந்து நடத்துனர் மீது பள்ளி மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடத்துனரை தாக்கிய பள்ளி மாணவர்கள்...பேருந்தை சாலையில் நிறுத்தி போராட்டம் நடத்திய ஓட்டுநர்கள்....சென்னையில் பரபரப்பு...!!

சென்னை அண்ணா சதுக்கம் முதல் பெரம்பூர் வரை செல்லக்கூடிய 29 a எண் கொண்ட பேருந்தானது ஓட்டேரி நோக்கி இன்று மாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தில் புரசைவாக்கத்தில் இயங்கி வரக்கூடிய பள்ளி மாணவர்கள் சிலர் ஏறியுள்ளனர். அவர்கள் பேருந்தின் படிக்கட்டில் நின்ற படி தாளம் தட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது படிகட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை உள்ளே வரும் படி அப்பேருந்தின் நடத்துனரான கார்த்திக் கூறியதாக தெரிகிறது. ஆனால் மாணவர்கள் தொடர்ந்து உள்ளே வராததால் கீழே இறங்கும் படி நடத்துனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த பள்ளி மாணவர்கள் முதலில் பெண்களை தரக்குறைவாக பேசியுள்ளனர் அதனைத் தொடர்ந்து நடத்துனரை தாக்கியுள்ளனர். பின்னர் உடனே பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய ஓட்டுனர் சுப்பிரமணியையும் மாணவர்கள் கல்லால் தாக்கி விட்டு தப்பியோடினர்.

இதற்கிடையில் காயமடைந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர், தங்களை தாக்கிய பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஓட்டேரி ஸ்டாரன்ஸ் சாலை   பகுதியில்  அமர்ந்து  மறியலில் ஈடுபட்டனர். இதனை கண்ட மற்ற பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பேருந்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சாலையில் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து,போராட்டில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.