”8 மாத குழந்தையுடன் நாடு திரும்பிய பெற்றோர்” பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அமைச்சர்!

'ஆப்ரேஷன் ஆஜய்' திட்டத்தின் மூலம் இந்தியா திரும்பிய தமிழர்கள் 28 பேர் தமிழகம் வந்தடைந்தனர். 

போர் காரணமாக, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் 'ஆப்ரேஷன் ஆஜய்' திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு, தாயகம்  அழைத்து வரப்படுகின்றனர். அந்த வகையில், முதல் சிறப்பு விமான மூலம் 21 தமிழர்கள் ஏற்கனவே தமிழகம் வந்தடைந்த நிலையில், சனிக்கிழமை மேலும் 28 பேர் தமிழகம் வந்தடைந்தனர். 16 பேர் சென்னை வந்தடைந்த நிலையில், எஞ்சியவர்கள் பிற ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை விமான நிலையம் வந்தவர்களை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டை சேர்ந்த 128 பேர், தங்களை மீட்கும்படி பதிவு செய்துள்ளதாகவும், இதில்,  49 பேர் இதுவரை அழைத்துவரப்பட்டுள்ளதாகவும், 12 பேர் நேரடியாக வந்துள்ளதாகவும் கூறினார். 

இதனிடையே, 8 மாத கைக்குழந்தையுடன் நாடு திரும்பிய சாந்தி, மத்திய - மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார். போரினால் மிகுந்த அச்சத்தில் இருந்ததாகவும், தற்போது நாடு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.