ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர்...!

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்க  முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூடியது. முதல் நிகழ்வாக கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா, பங்காரு அடிகளார் உள்ளிட்ட தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது மாநில அரசின் திட்டங்களுக்கு எப்படி முட்டுக்கட்டை போடலாம் என நாள்தோறும் யோசித்து வரும் ஆளுநர், சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருப்பது மக்கள் விரோத செயல் எனக் கூறினார்.

இதையும் படிக்க : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி விழா கோலாகலம்...!

அரசியல் சட்டத்துக்கு எதிராக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டுமென குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை திருப்பி அனுப்பும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டையும் மக்களையும் அவமதித்ததாகவும் கூறினார். 

ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய ஒன்று எனவும், பதவியில் இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு அடங்கியிருக்க வேண்டுமெனவும் முதலமைச்சர் கண்டிப்புடன் கூறினார். தொடர்ந்து, தீர்மானத்தை வரவேற்று வழிமொழிந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை எனக் கூறினார். 

ஆளுநர் தமிழ் மொழி, கலை, பண்பாடு, கலாச்சாரத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதாகக் கூறி தீர்மானத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராமச்சந்திரன் ஆதரவளித்தார். அதேபோல், அராஜகமான முறையில் செயல்படும் ஒரு ஆளுநர் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இருந்தது கிடையாது எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாலியும் ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தீர்மானத்துக்கு ஆதரவளித்தனர்.