கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை: வழி காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு...

கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை: வழி காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு...

கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும் என கடந்த மாதம் 29- ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் அறிவிப்பை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்பு பணிக்குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தொடர்பாக கணக்கீடு செய்ய வேண்டும் எனவும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தரவுகளை பெற்று கணக்கீடு செய்ய வேண்டும் எனவும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளை, மாவட்ட வாரியாக உள்ள குழந்தைகள் நல ஆணையத்தின் முன்பு கட்டாயமாக ஆஜர் படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பெற்றோரை இழந்த குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கும் பட்சத்தில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அதே பள்ளியில் படிக்க வழிவகை செய்யப்படுவதோடு,  பிரதமரின்  நிதி உதவி அல்லது மாநில அரசின் நிதியில் இருந்து கட்டணம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குழந்தையின் பெற்றோர் அரசு ஊழியர்களாகவோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களாகவோ இருக்கும்பட்சத்தில் அரசின் எந்த சலுகையும் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.