கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு; அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு; அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தங்களது குழந்தையின் கை அகற்றப்பட்டதாக ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதியினர் குற்றம் சாட்டியிருந்தனர். பெற்றோரின் குற்றச்சாட்டை அடுத்து விசாரணை குழு அமைத்து நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, அரசு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குழந்தையின் உடல் நிலை எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி ஒன்றரை வயது குழந்தை  உயிரிழந்தது. இவ்விவகாரத்தில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகீர், குறை பிரசவத்தில் 1.5 கிலோ எடையுடன் 32 வாரத்தில் பிறந்தது. அந்த குழந்தைக்கு தீவிர hydrocephalus எனும் மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்தது.

அதற்காக ஐந்து மாதத்தில் நீர் கசிவை உறிஞ்சி எடுக்க VP shunt எனும் சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும், தீவிர ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்திறன் குறைபாடும் கொண்டிருந்தது அந்த குழந்தை. நீர் கசிவை உறிஞ்சுவதற்காக பொருத்தப்பட்ட VP shunt  ஆசன வாய் வழியாக வெளியேறியது. இது குழந்தையின் உடல்நிலையை தொடர்ந்து பாதித்தது.

பாக்டீரிய நோய் தொற்றினால் ரத்தத்தில் நச்சுக்கள் கலந்து அந்த நச்சுத்தன்மையால் குழந்தைக்கு பாதிப்பு,  வைட்டமின் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் குழந்தை உயிரிழந்துள்ளது. இவ்வாறு, குழந்தையின் இறப்பிற்கான காரணத்தை  எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க:ஹரியானாவில் ஊரடங்கு தற்காலிகமாக வாபஸ்!