அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு தவறான மருந்து செலுத்தியதால் உறவினர்கள் முற்றுகை.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு தவறான மருந்து செலுத்தியதால்  உறவினர்கள் முற்றுகை.

காரைக்கால் அடுத்த நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு தவறான மருந்து செலுத்தியதால் உடல்நிலை பாதிக்கபட்ட பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்கால் அடுத்து நெடுங்காடு பகுதியில் வேல்முருகன் என்பவரது மனைவி கனிமொழி (31). இவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாதால் நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு ரத்தம் குறைவாக உள்ளதாகவும் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் ரத்தம் அதிகரிக்க தினந்தோறும் ட்ரிப்ஸ் செலுத்த வேண்டும்  எனவும், அந்த வகை ட்ரிப்ஸ் மருத்துவமனையில்  இருப்பு இல்லை என்றும் 'வெளியே வாங்கிட்டு வந்து தாருங்கள்' என்றும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, அப்பெண்ணின் கணவர் தனியார் மெடிக்கலில் மருந்தை வாங்கி வந்து கொடுத்துள்ளார். கடந்த இரண்டு நாட்கள் அந்த மருந்தை சரியான முறையில் ஏற்றி உள்ளனர். மூன்றாவது நாளாக இன்று, அந்த மருந்துக்கு பதிலாக வேறொரு மருந்தை அப்பெண்ணிற்கு செவிலியர் ஏற்றிக் கொண்டுள்ளதை கண்ட அவர் கணவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, அங்குள்ள செவிலியரிடம் "நான் வாங்கிட்டு வந்தது வெள்ளை கலரில் இருக்கும்; நீங்கள் ரத்த கலரில் ஏற்றிக் கொண்டு உள்ளீர்கள்? " என்று கேட்டுள்ளார்.

இதனையடுத்து, சுதாரித்துக் கொண்ட செவிலியர், மருந்தை நிறுத்தி அதை எடுத்து உள்ளார். இருந்தபோதிலும் பெண்ணிற்கு உடல் சோர்வு ஏற்பட்டு மயக்க நிலை வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் அடுத்து பெண்ணின் உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பணியில் வந்த மருத்துவர் தவறு நடந்தது உண்மைதான் என்றும் அதை சரி செய்து விடலாம் என்று கூறியுள்ளார். அதனை ஏற்றுக் கொள்ளாத உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இந்த புகாரின் பேரில் அங்கு வந்த சுகாதுறை இணை இயக்குனர் சிவராஜ் குமாரிடம் உறவினர்கள் முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர். அப்போது, விசாரணையில் மருந்து தவறுதலாக கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

மேலும் பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். மேலும் அரசு மருத்துவமனையில் மருந்து பற்றாகுறையால் வெளியில் வாங்கி கொடுத்தது, அதன் விளைவாக மருந்தை மாற்றிக்கொடுத்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, நோயாளிகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க    | "கர்ப்பிணி பெண்கள் நிதி உதவி திட்டத்தில் ஊழலா?" அண்ணாமலை கேள்வி!