திருப்பூரில் ரூ.167.58 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்..!

திருப்பூரில் ரூ.167.58 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்..!

திருப்பூரில் 167 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட இருக்கும் திட்டங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’:

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் உணவகத்தில், 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தலைப்பில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் மண்டல மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த சிறு, குறு தொழில்துறை நிறுவனங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.

திட்டங்கள் தொடங்கி வைப்பு:

அதன் பிறகு சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 167 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட இருக்கும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், 100 கோடி ரூபாய் மதிப்பிலான தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம், தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி செயல்முறை தளம், பின்னலாடை குழுமத்திற்கான பொது வசதி மையம் ஆகிய திட்டங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 

மேலும் படிக்க: https://malaimurasu.com/15-murders-in-the-last-36-hours

திட்ட பணிகளுக்கு அடிக்கல்:

இதைத்தொடர்ந்து, குறிச்சி தொழிற்பேட்டையில் 22 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள தொழிலாளர் தங்கும் விடுதி, தனியார் தொழிற்பேட்டை மற்றும் சேலத்தில் 24 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள வெள்ளி கொலுசு பொது வசதி மையம் ஆகிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். 

கடன் கிடைக்க ஒப்பந்தம்:

தொடர்ந்து, விழாவில் பேசிய முதலமைச்சர், வங்கிகள் மூலமாக எளிதில் கடன் கிடைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், திமுக அரசு பதவியேற்ற பின்னர், புதிதாக 3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.