மூடிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க புனரமைப்பு குழு ஆய்வு...!

தலைஞாயிறு என்.பி.கேஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரசு நியமித்துள்ள புனரமைப்பு குழுவினர் ஆய்வு.

மூடிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க புனரமைப்பு குழு ஆய்வு...!

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 2017-ஆம் ஆண்டு மூடப்பட்டது. இந்த ஆலையை விவசாயிகள் நலன் கருதி மீண்டும் இயக்க வேண்டும் என விவசாயிகள் உட்பட அனைவரும் கோரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில் சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவது குறித்து ஆய்வுக்குழு அமைக்கப்படும் என வேளாண்மைத் துறை அமைச்சர் அண்மையில் அறிவித்தார். இதையடுத்து இன்று புணரமைப்பு குழுத் தலைவர், அரசு சிறப்பு செயலர் ஆபிரகாம் தலைமையில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் உள்பட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கரும்பு பிழியும் இயந்திரம், பாய்லர் உள்ளிட்ட ஆலையின் அனைத்து தளவாடங்களையும் பார்வையிட்டனர். தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாகவும், இயந்திரங்களின் தற்போதைய நிலை குறித்தும், 10 பேர் கொண்ட குழு தற்போது ஆய்வு மேற்கொண்டது. இக்குழு ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்னர், தொழில்நுட்ப குழுவினரால் ஆலை இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து ஆலை சீரமைக்கும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலையை மீண்டும் இயக்க ஏதுவாக விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.