மதுரை கல்லூரி முதல்வர் பணியில் ரத்னவேல் நீடிப்பார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உறுதி மொழி விவகாரத்தில், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த மதுரை கல்லூரி முதல்வர் பணியில் நீடிப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

மதுரை கல்லூரி முதல்வர் பணியில் ரத்னவேல் நீடிப்பார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரை மருத்துவ கல்லூரியில் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில், சமஸ்கிருத வாக்கியத்தை கூறி மாணவர்கள் உறுதிமொழி எடுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்னவேல் மீண்டும் மதுரை மருத்துவ கல்லூரி முதல்வராக நீடிப்பார் என சட்டபேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டபேரவையில் இன்று பேசிய அவர், ஹிப்போகிராட்டிக் உறுதி மொழி தான் பொதுவாக உலக முழுவதும் எடுப்பது வழக்கமாக உள்ளது என குறிப்பிட்ட அவர், ஆனால் சமஸ்கிருத உறுதி மொழியில் மன்னர்களால் வெறுக்கப்படுபவர்களுக்கும் மக்களால் வெறுக்கப்படுபவர்களுக்கும் மருத்துவம் பார்க்கமாட்டேன் என்று இருக்கிறது என்றும், இந்த உறுதி மொழியை எப்படி எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இன்னும் 10 ஆண்டுகளுக்கு பின், உறுதி மொழியை சமஸ்கிருதத்தில் கூற வேண்டும் எனத் தெரிவிக்கப்படும் என்றும், அது மொழி திணிப்பாக வந்துவிடும் என குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் மொழி திணிப்பு கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.

மேலும் கல்லூரி முதல்வர் ரத்னவேல் நேரில் சந்தித்து அளித்த விளக்கத்தை ஏற்று மீண்டும் மதுரை மருத்துவ கல்லூரி முதல்வராக பணி நியமனம் செய்யப்படுவார் என்று அறிவித்தார்.