டெல்லி பாஜக பிரமுகர்  வீட்டில் ராஜேந்திர பாலாஜி பதுங்கல்?

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லி பாஜக பிரமுகர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

டெல்லி பாஜக பிரமுகர்  வீட்டில் ராஜேந்திர பாலாஜி பதுங்கல்?

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேர் மீது 5 பிரிவுகளில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து தலைமறைவான ராஜேந்திரபாலாஜியை, பல மாநிலங்களிலும் 8 தனிப்படையினர் தேடி வருகின்றனர். ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்ததாக கருதப்படும் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் விக்னேஷ்வரன், கோடியூர் இளம்பெண்கள் பாசறை நகர செயலாளர் ஏழுமலை ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில், டெல்லியில் உள்ள பாஜ பிரமுகர் வீட்டில் ராஜேந்திரபாலாஜி தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் 3 தனிப்படையினர் டெல்லி விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் தர்மபுரி அருகே மலைகிராமத்தில் ராஜேந்திரபாலாஜி பதுங்கியிருப்பதாக நேற்று காட்டுத்தீ போல் தகவல் பரவியது. இது குறித்து போலீசார் கூறுகையில், தர்மபுரியை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேலூர் அம்மாபாளையம் மலைகிராமம் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இருந்தாலும், சேலம் ஆத்தூரில் இருந்தும், கள்ளக்குறிச்சியில் இருந்தும் கல்வராயன் மலை வழியாகவே இங்கு வந்து செல்லமுடியும். மிகவும் சிரமப்பட்டு தான் இங்கு வரவேண்டும். இதை தனக்கு சாதமாக்கி முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டில் ராஜேந்திரபாலாஜி பதுங்கியிருக்கலாம் என்று தகவல் பரவி வருகிறது.

இதனால் உள்ளூர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தனிப்படை போலீசாரும் விசாரித்து வருகின்றனர்'' என்றனர். முன்னாள் அமைச்சரின் உதவியாளரை பிடித்து விசாரணை செய்ய இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.